Sunday, July 20, 2008

தமிழ்வழி தனியார் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கத் தயாராகும் பெற்றோர்கள்

அரசு தொடக்கப்பள்ளிகளில் பெரும் விளம்பரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட செயல்வழிக் கற்றல் முறை தற்போது மெதுவாக செயலிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் மாடல் பள்ளிகள் உருவாக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவாக்கப்பட்டது. ஆசிரியர் பற்றாக்குறை, பல்வேறு நடைமுறைச் சிக்கல் காரணமாக மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர். சில ஆசிரியர் கூட்டணிகள் செயல் வழி கல்வித் திட்டத்துக்கு எதிராக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்து விட்டன. புதியதாக தமிழ்வழி தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதியளித்துள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைளை அப்பள்ளிகளில் சேர்க்க முடிவு செய்து வருகின்றனர். தனியார் தமிழ்வழிப் பள்ளிகளில் செயல்முறை கற்றல் திட்டம் இல்லை. பழைய முறையில்தான் பாடம் கற்றுத் தரப்படுகிறது. திட்டம் குறித்த சிறு குறிப்பு: இம்முறையில் வீட்டுப்பாடம் கிடையாது. மனப்பாடம் கிடையாது. எழுத்து வேலை கிடையாது. தேர்வு கிடையாது. பாடப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட அட்டைகள் ஒவ்வொரு வகுப்புக்கு, ஒவ்வொரு பாடத்துக்கு என தயாரிக்கப்பட்டுள்ளது. ஏணிப்படிகள் என கால நிலை அட்டவணை உள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களை குழுவாக பிரித்துக் கொள்வார்கள். அட்டவணையில் உள்ள படத்தில் உள்ள பாடத்தை எடுத்து வந்தவுடன் ஆசிரியர் பாடம் போதிப்பார். முதலில் சரியாக கற்றுக் கொண்ட மாணவன் அடுத்த அட்டையை எடுத்துக் கொண்டு அடுத்த குழுவில் சேர்வான். இப்படியாக விளையாட்டு உள்பட அனைத்துப் பாடங்களும் போதிக்கப்படுகிறது,. மாணவர்களுக்கு சில திறனாய்வுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்களுடைய படைப்புகள் கம்பிப் பந்தலில் காட்சிப் பொருளாக வைக்கப்படுகிறது. தனி பைல் ஒவ்வொரு மாணவனுக்கும் உண்டு. மாணவர்கள் உயரத்துக்கான கரும்பலகைகள் ஒவ்வொரு குழுக்களுக்கும் அமைக்கப்படுகிறது. மாணவர்கள் சிந்தனையைத் தூண்டும் முறை என்று இதனை அழைக்கிறார்கள்.நடைமுறை சிக்கல்கள்: செயல்முறை கல்வித் திட்டத்தில் திறமையான மாணவன் பல அட்டைகளை சீக்கிரம் முடித்து விட்டு அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்கிறான். ஈரோடு மாவட்டத்தில் பல தொடக்கப்பள்ளிகளில் 4-ம் வகுப்பு மாணவன் முதலாமாண்டு அட்டைகளைக்கூட முடிக்க முடியாமல் உள்ள நிலையைப் பார்க்க முடிகிறது. லெவலிங் கார்டு என்ற முறையில் அத்தகைய மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுகின்றனர். இம்மாணவர்கள் 6-ம் வகுப்பிற்கு உயர்நிலைப் பள்ளி களுக்குச் செல்லும்போது கடினமான பாடங்களைப் படிக்க முடியாமல் படிப்பைப் பாதியில் விடவேண்டிய சூழ்நிலை உருவாகக்கூடும்.ஆசிரியர் வேளைப்பளு மற் றும் பற்றாக்குறை : 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள், ஒரு வகுப்பில் பல மாணவர் குழுக்களை கவனிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் வகுப்பில் 40-க்கும் மேற்பட்டவர்கள் உள்ள நகர்ப்புற பள்ளிகள் உள்ளன. மேலும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக இரு வகுப்புகளை ஒரு ஆசிரியர் கவனிக்க வேண்டிய நிலையும் பல பள்ளிகளில் உள்ளது. 40 மாணவர்களுக்கு இரு ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே இத்திட்டம் ஓரளவாவது வெற்றி பெறும்.ஆசிரியர்கள் தனித்தனியாக மாணவர்கள் அட்டைகளைப் பார்க்க வேண்டும், படித்து எழுதிய நோட்டைத் திருத்த வேண்டும். பயிற்சி ஏடுகளை பராமரிக்க வேண்டும். முந்தைய முறையில் படிக்காத மாணவர்கள் மீது சிறப்பு வகுப்புகள் மூலம் தனிக்கவனம் செலுத்த முடிந்தது.செயல்வழிக் கற்றலில் எழுத்துப் பயிற்சி இல்லாததை பெருங்குறையாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். செயல்வழிக் கல்வியில் புத்தகம் தேவையில்லை என்ற நிலையில் அரசு புத்தகம் வழங்குகிறது. வீட்டில் பெற்றோர்கள் புத்தகத்தை படிக்கச் சொன்னால் இவையெல்லாம் படிக்க வேண்டியதில்லை என மாணவர்கள் சொல்லும் பதிலைக் கேட்டுப் பெற்றோர்கள் குழம்பிப்போயுள்ளனர்.இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பெருந்துறை வட்டாரச் செயலாளர் பி.மயில் சாமி “செயல்வழிக் கல்வி திட்டத்துக்கு அரசு உதவி பெறும் பல பள்ளிகள் தடையாணை பெற்று பழைய முறையிலேயே நடத்தி வருகின்றன. தனியார் தமிழ்வழிக் கல்வி பள்ளிகளும் பழைய முறையேதான் பின்பற்றுகின்றன, அரசு அனைத்து தொடக்கப்பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும். இல்லை எனில் அரசு தொடக்கப்பள்ளிகளுக்கு பெற்றோர்கள் மாணவர்களை அனுப்புவது படிப்படியாகக் குறையும்” என்று குறிப்பிட்டார்.பெருந்துறை வட்ட அனை வருக்கும் கல்வி இயக்கம் மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றியக் குழு ஆகியவற்றின் தலைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளருமான ஆர்.திருநாவுக்கரசு “அரசு அனைத்து ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களை அழைத்து கருத்துக் கேட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். ஆசிரியர் மாணவர் விகிதத்தைக் குறைக்க வேண்டும். பாடம் நடத்துவதைத் தவிர இதர பணிச்சுமைகள் தலைமையாசிரியருக்கு இருக்கக் கூடாது” என்று குறிப்பிட்டார்.தி.

ஜெயப்பிரகாஷ்நாராயணன், ஜனசக்தி நாளிதழில் வெளியான கட்டுரை - 20.0..7.2008

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

உள்ளம் சோர்ந்ததா, தூக்கி நிறுத்தடா!
உடலம் சோர்ந்ததா, மேலும் வருத்தடா!
கள்ள மாந்தராம் கயவர் நடுவிலே,
கடுமை உழைப்படா! வெற்றி முடிவிலே!
-பெருஞ்சித்திரனார்